Thursday, September 28, 2023

வெயில் மேயும் நீர்ப்புலி-விமர்சனம் கவிஞர் சாய்மீரா

காலத்தின் பக்கங்களில்
கவிதையெனும் ஆன்மா ...(சிறகு-31)
*******************************************√√

கவிஞர் சாய் மீரா  அவர்களின்
பார்வையில்

#கவிஞர்_சோலைமாயவன்
எழுதிய

#வெயில்_மேயும்_நீர்ப்புலி 
கவிதைத் தொகுப்பிலிருந்து

இந்த வாரத்திற்கான கவிதை
**********************************

மணிக்கு
நாற்பது கிலோ மீட்டர் ஓடும் கால்களைத்
தனியாருக்குத் தாரைவார்த்தேன்
கடுகளவு எழுத்தைக்கூட இமை சுருங்காமல் வாசிக்கும்
பட்டொளி வீசும் கண்களை
தனியாருக்குத் தானம் செய்தேன்
குண்டு குண்டாக எழுதுவதாக
அம்மா முத்தமிட்ட விரல்களைத்
தனியாருக்கு விற்பனை செய்தேன்
நாம் ஒருவர் நமக்கேன் இருவரென
ஒரு கிட்னியைத் தனியாருக்குத் தத்துக் கொடுத்தேன்
இணைப்பாக
கல்லீரலும் மண்ணீரலும் அனுப்பி வைத்தேன்
என் உடல் இயந்திரத்தின் உதிரிப் பாகங்கள்
ஒவ்வொன்றிலும்
தனியாரை ஊக்குவிக்கத் திறந்துவிட்டேன்
மரத்துக்கிடந்தன கால்கள்
பார்வை மங்கிப்போனது கண்களுக்கு
கிட்னி இதயமெல்லாம் சீரழிந்து சீழ்ப்பிடிப்பதற்குள்
ஆறேழு மாதங்கள் கடந்துவிட்டன
அட்டைப்பூச்சிகளாய்
என் தேசத்தில் கொழுத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்
தனியார்.

# சோலை மாயவன்.

கவிஞரின் வெயில் மேயும் நீர்ப்புலி மொத்தமாக இந்தியத்திருநாட்டின்
இனியதொரு நிலையை தோலுரித்துக் காட்டுகிறது. யாரேனும் உங்கள் நாட்டின் நிலை அன்றிலிருந்து இன்று வரை எப்படியானது எனக் கேட்டால் அவர்கள் கையில் இப்புத்தகத்தை தாராளமாகத் தரலாம். இது அது வென எந்த பிரச்சனைகளையும் இப்புத்தகம் விட்டுவைக்கவில்லை. 

எம் பாரதத்திருநாட்டின் கொடி பட்டொளி வீசிப் பறக்கிற அழகினால் கோவணமும் கலைத்து அம்மணமாய் ஊர்வலம் வந்த உழவர்களின் அழகும் கூடிப்போயிருப்பதை இரும்பினால் எழுப்பப்பட்ட இன்முகச்சிரிப்போடு அந்த தலைவரின் சிலை பார்த்தபடியே உள்ளது. என்ன செய்ய வயலெல்லாம் ரோடு போட்ட பின் வேலையற்றவனாய் போன உழவன் தானே நடந்தால் என்ன?
லாபத்திற்கு பேராசைப்பட்டு தாய் மண்ணில் அடிமடி தனில் ஆயிரெத்தெட்டு விஷ மருந்துகளை கொட்டிக்கொட்டி கொட்டையில்லா கூமுட்டை கதிர்களை விளைவித்து எதிர்கால சந்ததியின் இரைப்பையில் புற்று வளர்த்து மரபணுவில் மாற்றம் செய்த புண்ணியவான்களும் அவர்கள் தானே. நடந்தால் என்ன? அவர்களே அத்தனை செய்யும் போது எரிவாயு எடுத்தால் தான் என்ன? 

இது என்வரையிலான பார்வை. நியூட்டனின் மூன்றாம் விதி மேல் நம்பிக்கை கொண்ட எனது பார்வை மட்டுமே. எவ்வொரு செயலையும் அதற்கு நேரெதிர் முனையில் நின்றும் பார்க்க வேண்டிய தேவையும் உள்ளது தானே.

எள்ளுத்தாத்தா, கொள்ளுத்தாத்தா காலத்திலிருந்து செய்த கொடுமைகளை கலைந்தெறிய எல்லாத்துறைகளிலும்
எல்லா தொழில்களிலும் முன்னேறும் நல்ல திறமையாளர்கள் முளைக்கத் துவங்கிவிட்ட இக்காலத்திலுங்கூட இரண்டு மயானங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை எண்ணி கவிஞர் வருத்தங்கொள்கிறார் அதுவும் சரி தான்.

புத்தகம் முழுவதும் அப்பட்டமான பல உண்மைகளை பூசி மழுப்பாமல் நிர்வாணமாய் நிறுத்தியிருந்த போது ஒரேயொரு பேருண்மை என்னை உடைத்து நிறுத்தவே அக்கவிதையை இங்கு எடுத்து வந்தேன். விரித்துச்சொல்ல வேண்டிய வேலையை கவிஞரே கையிலெடுத்து விட்டார். அதன் கருப்பொருளை மட்டுமே விரித்துப்பேச விருப்பங்கொள்கிறேன்.

தாயை விற்ற பிள்ளைகளை பார்த்தது உண்டா நீங்கள். வேகமாய் கண்ணாடியை பார்த்துக்கொள்ளுங்கள். நானுங்கூடத்தான். தாயை ஒப்ப நிலைத்த தாய் நாட்டை விற்றும் தீராத மகவுகள் தன் உறுதி நிறைந்த கால்களை மகிழுந்து குறுக்காக விற்றனர் பின் கண்களை கணிப்பொறியிலும் தொலைகாட்சியிலும் அலைபேசியிலும் தாரை வார்த்து பின் தன் விரல்களை தட்டச்சு பொறியிடமும் காணொளி விளையாட்டுகளுக்கும் தானமிட்டு பல்வேறு வகையான இரசாயனமிட்ட உணவுகளை உண்டு களித்து இரண்டு எதற்கென ஒரு கிட்னியை அளித்த பின் அதற்குத் துணையாய் கல்லீரலும் மண்ணீரலும் அனுப்பி வைத்தபின் காது மூக்கு தொண்டை முதல் கெண்டைக்கால் நரம்புகள் வரை இந்த மருந்து அந்த ஊட்டச்சத்து பானம் புதுப்புது நிறங்களில் மாத்திரைகள் பல்வேறு வகையான அழகூட்டிகள் நிறமூட்டிகளென எங்கோ இருக்கிற எவனோ ஒரு தனியார் முதலை வயிறும் பின்புறமும் செழித்து வளர நானே சீரழிந்தோம். 

ஆனாலுமென்ன உலகம் எங்கள் உள்ளங்கையிலென உச்சுக்கொட்டி வியந்து கொண்டு நிலவின் முதுகைப் பார்க்கிற ஆவலில் இதயத்தோடு மூளையையும் சமூக வலைதளங்களுக்கு உணவாய் பிய்த்தெறிந்த பின்னர் மரத்தே போய்விட்டன உடல்கள். 

அருவி எனும் திரைப்படத்தில் ஒரு நீண்ட வசனம் உண்டு சந்தோசமான வாழ்க்கைனா என்ன என்பதை அந்த படத்தின் கதாநாயகி ஒரே வசனத்தில் எடுத்துரைப்பார். அதன் மொத்த சாரத்தையும் ஒரே பத்தியில் எழுதிவிட்டார் கவிஞர். 

தானறியும் முன்னம் தன் குருதி உறிந்துதிரும் அட்டைப்பூச்சிகளாய் இந்த தனியார்கள் எம் தேசத்தாயின் உடல் முழுதும் நிறைந்திருப்பதே நிதர்சனமென நொந்து கொள்கிறார் கவிஞர்.

தூங்குபவர்களைத் தானே எழுப்ப முடியும் தூங்குவதை போல் நடிக்கும் உயர் மயிர்களையும் தூங்குவது நல்லது அதற்கு நாங்கள் கொடுப்பதையெல்லாம் நீங்கள் அப்படியே பெற்றுக்கொள்ளுங்களென தொடர்ந்து மனோவசியத்திலும் இலவச பணவசியத்திலும் ஆடை ஆபரணங்கள் அழகு அணிகலன்கள் படாடோபங்கள் பதிவி ஆசைகளென உயர் மயிர்களிடும் ரொட்டித்துண்டத்தை கவ்வித்திரிகிற தாய்நாட்டின் மீதிருந்த நன்றியைக்கொண்ற நம்மைப் போல நாய்களுக்கு எத்தனை அட்டைகள் மொய்த்து கொழுத்தாலும் வருத்தமில்லை.

என்ன செய்ய இதையும் ஒரு லைக் சேர் பார்வர்டு செய்து மிகப்பெரிய சமூகப் பொறுப்பை முடித்துவிடுகிற பெரும் காரியத்தை நாம் செய்கிறோமே. அதுவும்கூட சிலருக்கு கடினம் தான்.  மதிகெட்டு திரிகிற இந்நாடு மந்திகளுக்கானதும் மாட்டு மூளைகளுக்கானதும் தான்.

என்ன செய்ய எங்களுக்கு இணையத்தில் இணையற்ற வேலைகள் உள்ளனவே.

மிகுந்த சமூகப்பொருப்போடு இக்கவிதை நூலை வெளியிட்டிருக்கிற தோழர் சோலைமாயவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அருமையான படைப்பு. வெயில் மேயும் நீர்ப்புலி இந்த பாரதத்தின் கண்ணாடி.

சாய் மீரா.

No comments:

Post a Comment