Tuesday, December 5, 2017

செங்கவின் உரை பாரி மகளிரும் வனமிழந்த சிறுத்தையும்...! ############################# தனிமையின் தீராப் பிணி பிடித்த மனக்குகைகளின் இண்டு இடுக்குகளிலிருந்து தமிழ்க் கவிதை வெளியை பிடித்திழுத்து வந்து கரையொதுக்கியிருக்கிறது காலப்பெருஞ்சுழி! கவிதைகளை, கவிகளை மக்கட் பெருங்கடலில் கரையக் கூவிக் கூவி அழைக்கிறது புறத்தின் நெருக்குதல். புறங்கழுத்தின் கடைசி நரம்பும் அறுபட , ஓங்கிக் குரலெடுத்துக் கூவ வேண்டிய கவிமனமோ, செவியற்றுப் போய்விடுகிறது. வீழ்த்தப்பட்ட வாழ்வின் ஏக்கம் அழுத்த அழுத்த வெடித்துச் சிதறிய நாளங்களில் வழியும் செங்குருதியை கவிதைகளென்று மொழி பெயர்த்திருக்கிறார் சோலைமாயவன். நீண்ட காலமாக நம்மவர்களால் கைவிடப்பட்டிருந்த திணைக்கோட்பாடுகளைத் தற்காலப் படைப்புவெளி மீண்டும் கைகொள்ளத் துவங்கியிருக்கிறது. இவ்வினிய போக்கை சோலையின் கவிதைகளிலும் காண முடிகிறது . சங்கப் பாடல்களுள் எப்பொழுதும் எனை ஏக்கத்தில் உறைவிக்கும் பாடல் அங்கவை, சங்கவையினுடையது. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையோம்...... ............................................... யாம் எந்தையுமிலமே.... அன்பூட்டிய தந்தை, அரவணைத்த சுற்றம், அச்சமற்றுத் திரிந்த தாய்நிலம் யாவற்றையும் இழந்திருக்கும் திங்கள் வெண்ணிலவால் தூஸ்டிவிடப்பட்ட கையறு நிலையை அங்கவை, சங்கவையை அவ்வளவு எளிதாகக் கடந்திட முடியுமா...? யாவருக்குள்ளும் ஓர் அற்றைத் திங்கள் அமிழ்ந்திருக்கும் அகழும் பொழுதுகளில் மேலெழுந்து ஒளிவீசிப் , பிரகாசித்து, மங்கித் தேய்ந்து பின் மறையும். அங்கவைக்கும் சங்கவைக்கும் யாவர்க்கும் மட்டுமின்றி அவையல்ல பிறவுக்கும் ஓர் அற்றைத் திங்கள் இருக்கும். வனமிழந்த சிறுத்தைக்கும், வறண்டு விட்ட நதிகளுக்கும் கூட அது இருந்திருக்கலாம். வளமிழந்து, வயலிழந்து அந்நியத் தலைநகரில் அம்மணமாய் யாசிக்கும் சிறுத்தைகளுக்கும் மும்மாரி பொழிந்து முப்போகமும் விளைந்ததொரு அற்றைத் திங்கள் இருக்கவே செய்யும் . எனக்குள் இத்தனை கிளர்த்தும் இக்கவிதையை எப்படிக் கடப்பேன் நான்? தேயிலை நிழலில் உறங்குகிறது வனமிழந்த சிறுத்தை. அன்பின் ஐந்திணையென்று நிலம் பகுத்து ஒவ்வொரு திணைக்குமான வாழ்வியலை வகுத்து வாழ்ந்த தொல்மரபு. திணை மாந்தர் தொடங்கி மரம், பூ, பண், பறவை, விலங்கென்று வாழ்ந்த பெருங்குடி சொந்த நிலத்திலேயே அகதியைப் போல் வாழ நேரிட்ட அவலத்தை தன் காலடி மண்ணைக் கூடக் காக்கவியலாது தவிக்கும் கையறு நிலையைக் காட்சிப்படுத்த மூன்றே மூன்று வரிகள் போதுமானதாயிருக்கிறது சோலைக்கு. குறுகத் தரிக்கும் கலை வாய்த்திருக்கிறது. காதல் உறவாடிய துணையிழந்து களமாடிய வனமிழந்து சர்க்கசின் சின்னஞ்சிறு முக்காலியில் அமரும் வித்தையை யானைகள் எங்கிருந்து கற்றன? எண்ணாயிரம் கேள்விகளை எழுப்புகிறது இக்கவிதை. ஒற்றைப் பாய்ச்சலில் வனமளந்த பாதங்களை ஒரு தேயிலைச் செடிக்கடியில் கூனிக் குறுக்கும் படியான பேரவலம் அச்சிறுத்தைக்கு வாய்த்துவிட்டது. சிறுத்தைக்கு மட்டுந்தானா.....? கடக்க முடியாத கவிதையாகிவிட்டது. ###### கவிஞர்களுக்கென்ன...? ஏதேனும் ஓர் கவிதையை எழுதிவிட்டுப் போய்விடுகிறார்கள். ஆனால் அக்கவிதை நமக்குள் புதைந்து, ஈரம் உறிஞ்சி, முளைத்துக் கிளைத்து, வேரூன்றி விழுதூன்றி பின் நமக்குள் படரத் துவங்கிவிடுகிறது பெரும் கொடியென.... கரும்பச்சை நிறத் தண்ணீர் ஓடும் நதி அது. தலையில் அன்னக் கூடையையும், இடுப்பில் என்னையும் சுமந்து கொண்டு ஓர் நாளில் இரு முறை அந்நதியைக் கடப்பார் என் அம்மா. அப்படித்தான் அந்நதி எனக்குப் பழக்கம். கரையோரங்களில் நாணல்கள் அடர்ந்திருக்கும். நாணலில் மறைந்திருக்கும் நீர்க் குருவிகள் ஆளரவம் கண்டால் விருட்டென்று பறக்கும். படபடக்கும் அதன் சிறகுகளால் நதியை நம்மீது தூவிச் செல்லும். இருகரைகளிலும் தாழை அடர்ந்திருக்கும். பின்னந்தியில் தாழை மடலவிழ வாசம் நதியெங்கும் நிறையும். நதிக்கரையில் மட்டுமின்றி எங்கள் அக்காக்களின் தலைகளிலும் தாழம்பூ வாசம் வீசும். தூண்டிலிட்டு மீன் பிடிப்பதுதான் எத்தனை தவம்? கிடைத்த வரங்களை ( மீன்களை ) மணலில் புரட்டி, ஊனாங் கொடியில் கோர்த்தெடுத்து வந்தால் தெருவெங்கும் மணக்கும். சின்ன வயதில் சேர்த்து வைத்திருந்த கூழாங்கற்களை நீண்டகாலமாய்ப் பாதுகாத்து வைத்திருந்தேன். ஆனால் நதியை....? இன்று அந்நதியின் மீது கட்டப்பட்ட தரைப்பாலத்தில் மகிழுந்து, சரக்குந்து, பேருந்தென்று எல்லாமே ஓடுகிறது. தண்ணீர்....? மண், மழை, நதி, வனம் என்று இயற்கை ஒருபோதும் நம்மைக் கைவிட்டதில்லை. ஆனால் ஒவ்வொரு பொழுதும் இயற்கையைக் கைவிடுபவர்களாகவே நாம் அறியப்படுகிறோம். இது வெறுமனே கைவிடுதல் மட்டும்தானா? இயற்கையை நாம் அவமானப்படுத்துகிறோம். அகழ்வாரை எத்தனை காலம்தான் இந்த நிலம் தாங்கும்? இக்கேள்வியே இவரின் பெரும்பாலான கவிதைகளில் தகிக்கிறது. நதியாலானதே கவிதை எனச் சொல்லுமளவிற்கு தொகுப்பு முழுவதுமே நதியோசை கேட்கிறது. கால்கள் இடறி தலை குப்புற விழுந்து கிடந்தேன் ........ .......... பசி தீர்த்த ஆறு. ( பக்-15) தாகம் மட்டுமல்ல... பசியும் தீர்த்த ஆறு. அம்மாவின் பசி தீர்த்த ஆறு. நமது பசியைக் கூட அது தீர்த்துத்தான் இருக்கிறது. ஆனால் நமது பிள்ளைகளின் பசியை எது தீர்க்கும்? நதியின் கேவலையும், வனங்களின் விம்மலையும் சுமந்த கவிதைகளால் நமக்குள் ஓர் துளி ஈரமேனும் சுரக்கத்தான் வேண்டும். ########## சாகடிக்கப்பட்ட நதிக்காகவும், வனங்களுக்காகவும் கண்ணீரின் கடைசி ஈரத்திலும் உருகும் கவிமனம் அதே நதிகளை , குளங்களை, கிணறுகளைச் சபிக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? ஒடுக்கப்பட்டவனின் பார்வையில் சூழலியலைப் பார்க்கும் பொழுது அதில் தெறிக்கும் நியாயம் மானுடத்தை நேசிக்கும் ஒவ்வொருவர் நெஞ்சிலும் ஆணியறைகிறது. நூற்றாண்டின் தாகம் தீர்க்க மறுத்த இப்பொதுக்கிணறு என் குழந்தைகளின் பீத்துணிகளை வீசும் குப்பைத் தொட்டியாகட்டும் எனச் சபிக்கவும் செய்கிறார். எம் நூற்றாண்டின் ------------ ஊரின் நடுவே பொதுக்கிணறு( பக்-47) ஒரு குவளை நீருக்காய் தெருத் தெருவாக அலையவிட்ட தேசத்தை சபிக்காமல் என்ன செய்வது? மத்தவங்களுக்கு ஒரு வாய் தண்ணீர் கிடைக்காத ஊர்ல மனுச இருப்பானா... அம்மாவின் கண்ணீர் உஷ்ணமாக என்னுள் கிடக்கிறது. ( பக்-69) மேலும் ............. என் முப்பதாண்டு வாழ்வில் ஒரு முறையேனும் பறித்ததும் இறங்கியதும் இல்லை இந்தக் குளத்தில்( பக்-57) இவ்வரிகளுக்கும் வலிகளுக்கும் சொந்தமான கவிமனம்தான் வறண்டுவிட்ட நதிகள் குறித்து அக்கறைப்படுகிறதென்றால் மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவர் நெஞ்சிலும் ஈட்டியைப் போல் பாயும்தானே? நிலமற்றவன் ஒரு பிடி தானியத்திற்காய் எரித்துச் சாம்பலாக்கப்பட்டவன். ஒரு குவளை நீருக்காய்த் தெருத்தெருவாய் அலையவிடப்பட்டவனின் குரலாய் ஒலிக்கிறது கவிதைகள். இந்த நதிகள் பொங்கிப் பிரவகித்த பொழுது மட்டும் என் தாகம் தீர்த்ததா? இந்த மண்ணில் முப்போகம் விளைந்த பொழுது மட்டும் என் கலயம் நிறைந்த்தா? கேள்விகளில் தெறிக்கும் நியாயத்தின் சூடு தாங்காமல் தலை குனியட்டும் இத்தேசம். மானுடத்திற்காய்ப் போராடத் துடிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நெருப்பு எரிந்து கொண்டுதானிருக்கும். சோலைமாயவனின் கவிவெளியில் வெண்மணியின் நெருப்பு ஓயாது எரிந்து கொண்டிருக்கிறது. மழையற்ற இரவு .............. ( பக்-36) மானுடத்தின் நெடும் பயணத்தில் தீராக்கறையெனப் படிந்து விட்ட ஆணவக் கொலைகளின் மீதும் தன் பார்வையைப் பதிக்கத் தவறவில்லை. ( பக்-61) ################### தலித்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம், சூழலியம் என்று எதையும் விட்டு வைக்காமல் தனது கவிதைப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் சோலைமாயவன். எத்தனையோ திறப்புகளைக் கையளித்திருக்கிறார். அவரவர்க்கான திறப்பின் வழி, திறப்புகளின் வழி நாம் உள்ளே நுழையலாம். உலவிய பின் வெளியேறும் நம் மீது படிந்திருக்கும் குருதியின் வாசம். எதைக் கொண்டு கழுவப் போகிறோம்? ##################### நாம் வாழும் காலமே நாம் எது குறித்துப் பேச வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. நமது காலத்தில் நாம் அறத்தோடும் மறத்தோடும் வாழ்வதற்கு எது குறித்தெல்லாம் பேச வேண்டுமோ அது குறித்தெல்லாம் பேசக் கூடிய தொகுப்பாகவே இத்தொகுப்பைப் பார்க்கிறேன். இப்படிப்பட்ட கவிதைகளை, இப்படிப்பட்ட கவிஞர்களைக் கொண்டாடுவதன் வழி இத்தேசம் உய்வுறும். இனியொரு பட்டப்பகல் படுகொலைக்கு முன்பு எனக்கான ஆயுதங்களைக் கண்டடைய வேண்டிய காலத்தில் நிற்கிறேன். என்கிறார் கவிஞர். குரலற்றவனின் செங்குருதி வழியாக நாமும் அதைக் கண்டடைய முற்படுவோம்.

No comments:

Post a Comment