Monday, September 18, 2023

வெயில் மேயும் நீர்ப்புலி -விமர்சனம்

2023ஆண்டு சௌமா விருது பெற்ற கவிஞர் Thanappan Kathir  அவர்களின் பார்வையில்
வெயில் மேயும் நீர்ப்புலி கவிதைத் தொகுப்பு

-------------------------
நன்றி தோழர்

#வெயில்நீயும்நீர்ப்புலி...
#சோலைமாயவன்...

  கோவை மாவட்டம் சமத்தூர் வானவராயர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறவர் கவிஞர் சோலை மாயவன். ஏற்கனவே இவர் மூன்று கவிதை தொகுப்புகளை வெளியிட்டு இருக்கின்றார். இது இவரது நான்காவது கவிதை தொகுப்பாக 
வெளி  வந்திருக்கின்றது.

   மக்களைப் புரிந்து கொள்கிற படைப்பு மனம் தன்னியல்பாக அவர்களை குறித்து சிந்திக்கிறது என்ற பதிப்புரை நம்மை நூலுக்குள் ஈர்த்துக் கொள்கிறது.

   'செத்தால் புதைக்கும் சுடுகாடு இரண்டு வஞ்சனை இல்லாமல் படரும் வெயில் மட்டும் ஒன்று' இதுபோன்ற வேறு சில வரிகளை மேற்கோளிட்டு ச.செல்லத்துரை வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்.

   எளிய மனிதர்களின் வாழ்வியல் மீதான வன்முறைக்கான எதிர்கொள்ளாக இந்த நூல் இடம் பெறும் என்று புன்னகை கவிதை இதழ் ஆசிரியர் ரமேஷ் குமார் மற்றுமொரு வாழ்த்துரை நவின்றிருக்கிறார்.

   புறக்கணிப்பின் அவலத்தில் சிக்கிய மனிதர்களையும், அவர்கள் வாழ்வை எதிர்கொண்ட துணிவின் விலாசங்களையும் முன் வைக்கிற தொகுப்பாக இந்த தொகுப்பைக் கருதலாம். மாயவனின் எழுத்துக்கள் வர்ணங்களால் வனப்புகளால் வாழ்வியல் உண்மைகளைக் காணும் தரிசனத்தால் அழியா அழகாய் என்றும் ஓவியக்கோடுகளாய் நின்று நிலைக்கின்றன என்று சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் அணிந்துரை தந்திருப்பது நூலுக்கு சிறப்பு.

  பொள்ளாச்சி இலக்கிய வட்டமும் கவிஞர் அம்சப்பிரியா, 
இரா. பூபாலன், புன்னகைப்பூ ஜெயக்குமார் அவர்களும் எவ்வாறு தூண்டுதலாக இருந்து தமது படைப்பு வெளிவர காரணமாக இருந்தார்கள் என்று தன்னுரையில்  நன்றி தெரிவித்திருக்கின்றார் சோலை மாயவன்.

   மறைந்து அல்லது மறைக்கப்படுகின்ற காவல் தெய்வங்களை கண்முன்னே நிறுத்துகின்ற வரிகள் இவை. எவ்வாறு நாம் புறக்கணிக்கப்பட்டோம்? ஏன் இன்னும் நமது காவல் தெய்வங்களை நாம் மறந்து தொலைகின்றோம்? என்ற வினாவினை தொடுக்கின்ற வரிகள் இவை. 

"கோவில் எதற்கு உனக்கு 
போடா என்றீர்கள் 
எங்கள் முப்பாட்டனனை வீச்சரிவாளுடன் 
முன் நிறுத்தினோம்"

   எத்தகைய அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்து என்ன பயன்? கைபேசி தொடுதிரையில் உலகச் செய்திகள் அனைத்தும் வந்து குவிந்து விடுகின்றன. தொலைத்து விடுகின்ற அறிவியல் தொழில்நுட்ப உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம்  இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய பொதுப் பாதைக்கு போராட வேண்டியிருப்பது குறித்த கவிதை இது.

"ஒரு செய்தியை நொடியில் உலகெங்கும் வியாபித்து விடுகிறோம் 
ஆள்காட்டி விரல் நகம் அளவே அறிவியல் தொழில்நுட்பம் சுருங்கி விட்டதென சிலிர்க்க சிலிர்க்கப் பேசுகிறோம்
.
.
அறிவியல் நுட்பத்தில் - வாழ்வை தொலைத்து விடுகின்றோம்
.
இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய 
சுடுகாட்டிற்கு பொதுப் பாதை கேட்டுப் போராடுகிறோம்"

என் சுவரெங்கும் கேள்வியின் ஆணைகள் 

   எத்தனை எத்தனையோ கேள்விகளை, விடை தெரியா கேள்விகளைக் கேட்கின்ற பலர் கேட்காத கேள்வி ஒன்றை பதிவு செய்திருக்கின்றார்.

" இதுவரை 
யாரும் கேட்டதில்லை 
என்ன புத்தகம் படிக்கிறீங்கனு"
எத்தகைய வலி மிகுந்த வரிகள் இவை.

   பட்டும் பட்டுப்போகாமலும் இருக்கின்ற மரம் பற்றிய கவிதை இது

"இடம் பெயராமல் நிற்கிறது அந்த மரம் 
பழுத்த இலைகள் உதிர்ந்து கால்கள் முளைத்து விடுகின்றன மரத்தின் உயிர் குடித்துத் 
துளிர்கள் பிறப்பெடுகின்றன 
நான் எதனின் சாயல் 
நகராத மரமா 
கால் முளைத்துப் பழுத்த இலைகளா 
உயிர் குடித்துப் பிறப்பெடுத்த துளிர்களா 
சொல் என் பீமா. 

நிறைவு வரிகளில் மேற்கோளிட்டிருக்கும் இதிகாச நாயகன் விடை தர தருவானா?

   எவ்வாறு அழித்து நமது வாழ்வியலை தொலைத்து நிற்கின்றோம். இவ்வாறு படிப்படியாக நாம் செய்கின்ற செயல்களை, அரசியல்வாதிகள் செய்கின்ற அவலங்களை பட்டியலிட்டுக் கொண்டே வந்து வயிற்றில் அடித்து வயிற்றில் அடிப்போரைக் கேட்க நாதி இல்லையா என்று புகார் தெரிவிக்கின்றார்.

"யாரிடம் புகார் கொடுப்பதென்று வயிற்றைக் கழுவுவதற்கே வாழ்வா சாவா போராட்டத்தில் சதா வயிற்றிலடிக்கிற அரசாங்கத்தின் மீது 
எப்போது போல எந்த புகாரும் இல்லை"

  மாரடித்துக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள்' என்ற வரிகளில் மூலம் ஊடகங்கள் கூக்குரல் இடுவதை வன்மையாக கண்டிக்கிறார். 

  'பனை விதைகளை கரையோரம் பதிய விட்டு கடலளவு மழை நீரை சேமிக்க' என்ற வரி மூலம் மழை நீர் பிடிப்பை நாம் எவ்வாறு தொலைத்து ஊருக்குள் தண்ணீர் புக வழி வகுத்தோம் என்பதனை சுட்டுகிறார்.

   பதவி மோகம் பித்து பிடித்து அலைய வைக்கின்ற நிலையில் இருப்போர் இனி இந்த வரிகளை கண்டு அஞ்சக்கூடும். 

"முதல் மரியாதைக்காக சண்டையிடும் 
உங்கள் அரியாசனத்தின் மீது காறி உமிழ்கிறது 
ஒரு நோய்க்கிருமி"

   ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்ற குறுங்கவிதைகள் வெகு அழகு.

"நிதானத்திற்கு 
திரும்புவதற்குள் 
நழுவியது 
காலடியில் கிடைத்த 
நதி"

"உன் வயலும் 
என் வயலும் 
முத்தமிட்டுக் கொண்டிருந்த சந்திப்பில் 
முளைத்திருந்தது 
எட்டு வழிச்சாலை"

"அதிகாரத்தில் இருப்பவர்களில் ஒருவர் கூடவா 
உழவனின் விந்துக்கு பிறக்கவில்லை"

"பச்சைய வயல் தாயின் வயிற்றில் குமட்ட குமட்ட ஊட்டப்படுகிறது செழிக்காத தார்ப்பால்"

"மலைகளை உடைத்து நிலங்களை பறித்து 
ஆறுகளை மறைத்து 
மனிதர்களை வெறுத்து போடப்படும் சாலைக்குப்
பசுமைச்சாலையென குறிப்பெடுக்கிறார்"

"அறுவடைக் காலம் 
கோடைக் காலம் 
எல்லாம் போய் 
சம்மர் ஹாலிடேவில் நிற்கிறாள் மகள்"

 பசியின் கொடுமையை உணர்ந்தவனே இத்தகைய வலி தருகின்ற வரிகளை எழுத இயலும்.

"சோறு என்ற ஒற்றைச் சொல்லுக்கு 
கசங்கிய ஆடையோடு 
காற்று வெளியேறிய பந்தென சுருண்டு கிடந்தான்"

  அனைத்து கவிதைகளும் சமூகச் சீர்கேடுகளை, இயற்கை வளங்களை தொலைத்து நாம் எவ்வாறு செயற்கை உலகில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதனை சுட்டுவதாக அமைந்திருக்கின்றது. ஆசிரியருடைய நோக்கம் புதிய விடுதலை வேள்வியினை கவிதை கணைகளால் தொடுப்பது போன்று அமைந்திருப்பது சிறப்பு.

   சமூக அக்கறையின் பிம்பமாக ஆசிரியர் மிளிர்கிறார் என்று சொன்னாலும் அவரது கோணங்கள்  நமக்கு புதிய பாதையைத் தேடத் தூண்டுவதாக அமைகிறது.

#வெயில்நீயும்நீர்ப்புலி
#சோலைமாயவன்
#பொள்ளாச்சிஇலக்கியவட்டம்.
#பக்கங்கள் 120
#விலை )ரூ.120

1 comment: