Sunday, February 26, 2023

சோலைமாயவன் கவிதை

மாயா-49
கோடைகாலத்தின் ஊற்றெடுக்கும் வெயில்நீரை
நிலமெங்கும் பாயுமர பாலைவனத்தின்
மணல்துகள் குகையினுள் என் உயிரே -நீ
மீளவழிற்று சிறைப்பட்டுக்கிறாய்

என்
றெக்கைகள் உதிரும் வரை
பறவையாய் மணல்காட்டில்
சுற்றி திரிந்தேன்-உன்னை
மீட்டெடுக்க

என் செந்நிற அலகுகளால்
வலிமையான மணல்பாறையை
கொத்தி கொத்தி-என்
குருதியால் மீட்டுவிடமால்
மயக்கமுற்று ஒலமிடுகிறேன்

பூமிக்குள் புதைக்கப்பட்ட
சிறுவிதையென
மணற்குன்றுக்குள் முழ்கிக்கிடக்கிறாய்

நான் புயற்காற்றாய்
பிறப்பெடுத்து
மணலைதூசியென பறக்க விட
கோட்டையாய் என் முன்னே நிற்கிறது

அடைமழையென
விடாமல் பொழிகிறேன்
கரையும் மணல் ராஜ்ஜியம்
இன்னொரு மணலை
உன் மீது நிரப்பி விடுகிறது

திட்டுதிட்டாய்
குவிந்து கிடக்கும் மணல்தீவுக்குள்
நீர் நிரம்பிய குளமென
நிற்கிறேன்

என் நீரின் கைகளால் உன் வேரினை தொடுவேன்
என்
தண்ணீரின் வாசத்தால்
உன் இலைகள் முளைக்கும்

என் குளம்
கொஞ்சம் கொஞ்சமாக
உருமாற்றம் அடைகிறது
கடலாக

சோலைமாயவன் கவிதை

மாயா-63
ஆற்றின் நடுவில் மிதந்துசெல்லும் விரிக்காத தாமரை மொட்டென காத்திருக்கிறேன்

என் கார்காலம் பொழுதில்
விதைகளை பயிரிட
நிலமெங்கும் உழது உலர்த்தி வைத்திருக்கிறேன்

உள்ளங்கையில் சூரியனின்ஒளி படும்படி
விரல்களை விரித்து
துளி மழைக்கும் ஏங்கும்
உழவனின் நம்பிக்கையின் பேரொளியை நான்
பிடித்திருக்கிறேன்

உன் வாசம் தீண்டலில்லாமல்
வாடிக்கிடக்கும் தொட்டாசிணுங்கியின்
இலைகளுக்குள் என் கனவுகளை ஒளித்து வைத்திருக்கிறேன்

பெரும்பிரளயத்தின் கண்ணாடியில்
முதல்  செடியாய் பெருமகிழ் பூத்திட என் மகரந்தங்களை உனக்குள்
காற்றென நிரப்பிவிடுகிறேன்

சோலைமாயவன் கவிதை

காதல் தளும்பிய நிரலைகளில் மௌனத்திருக்கும் மொட்டுகள் இமை திறக்காமல் தியானத்தில் நிற்கும் சூரியனின் ஒளிப்பறவைகள் சிறகு விரிக்காத குளிர்காலப் பொழுதொன்றின் அதிகாலையில் ஜஸ் உறைந்திருக்கும் அகன்ற குளத்தில் நீராட இறங்குகிறாய் பூ இதழ் மேனியெங்கும் போர்த்திய மெல்லிய ஆடையை இறுக அணிந்திருக்கிறாய் வளர்ந்த மரத்தின் கிளை உச்சியில் ஒரு பறவையின் அலகு போன்று கண்களால் விழித்திருக்கிறேன் ஒவ்வொரு முறையும் முழ்கி முழ்கி எழும் போது விலகாத ஆடையாய் என் பார்வையை நிறுத்தி வைத்திருக்கிறேன்

சோலைமாயவன் கவிதை

மாயா-76
ஆட்டுக்க்குட்டியின் கழுத்தில் கட்டிய சலங்கைமணியென
உன் பெயரை ஒலித்துக்கொண்டே இருக்கிறேன்

தனித்திருக்கும் வேப்பம்மரத்தின் கிளைகளில் உன் பெயரை
பறவையென பாடுகிறேன்
இனிக்கத்தொடங்கியன
வேப்பங்காய்கள்

முட்புதர்கள் நிறைந்து
மணல்கள் அற்று நீர் இல்லாத நெடிய ஆற்றில்
உன்பெயரை சும்மா கிறுக்கிறேன்
முதல் துளி உன்னை நனைக்கிறது

ஆளில்லாத பனந்தோப்புகளில் குயிலின் தனித்த குரலோடு உன் பெயரை
காற்றில் இசைக்கிறேன்
பனயோலையின் சலசலப்புக்குள் சங்கீதம்
பிறக்கிறது

பயன்படுத்த முடியாத
ஊரின் நடுவே
பாழும் கிணற்றில்
உன் பெயரை கல்லென
தூக்கிப் போட
தாகம் தீர்க்கிறது
ஊருக்கே கிணறு
மாயா

சோலைமாயவன் கவிதை

மாயா என் வழிநெடுகிலும்
பின் தொடருகிறது-அப்
பாடலின் முதல் சொல்

அப்பாடலின் முதற்சொல்லுக்கும் அடுத்த
சொல்லுக்கும் பெரிய பாலமொன்று இடிந்துகிடந்தது

முதற்சொல்லின் வழியாக
அப்பாடலுக்குள் நுள்உழைய முற்படுகையில் என் பின்னங்காலில் இறுகும் சங்கிலின் வலிமை மெல்ல உணர்கிறேன்

நிலம் இழந்தவனைப் போல
வனம் இழந்தவனைப்போல
அச்சொல்லை பாடலென்று
திரும்ப திரும்ப
பாடிக்கொண்டிருக்கிறேன்

ஒரு சொல்
ஒரு பாடல்
இந்த ஜென்மத்தின் குரலாக ஒலிக்கட்டும்

வெயில் மேயும் நீர்ப்புலி ,-விமர்சனம்

https://m.facebook.com/groups/1444591182255718/permalink/5726311584083635/?mibextid=Nif5oz