வாசிப்பனுபவம்
விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி
கவிதைத் தொகுப்பு
சோலை மாயவன்
வெளியீடு பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
முதல் பதிப்பு ஜூன் 2017
பக்கம் 80
விலை ரூபாய் 60
இளமையின் துடிப்பில் எழுச்சியின் கனவுகளில் காதல் நிறைந்திருக்கலாம். எதிர்காலத்தின் உயரத்தில் தன்னை நிலைக்க வைத்திருக்கும் லட்சியம் ஒளிந்திருக்கலாம். குடும்பத்தின் செல்வச் செழிப்போ வறுமைத்தனமோ வாழும் ஒவ்வொருவரையும் யோசிக்க வைத்துவிடும். வறுமையும் சாதி ரீதியான ஒடுக்கு முறைகளும் ஒருவனை அழுத்த அழுத்த அவனுக்குள் பீறிட்டு எழும் இலட்சிய வேட்கை சமூகத்தை அதன் பார்வையை எப்பாடுபட்டாவது நேர் செய்வதற்கான வழிகளை தேடத் தொடங்கும். அந்த வகையில் இலக்கியம் ஒவ்வொரு ரௌத்திரம் கொள்ளும் மனதையும் ஆற்றுப்படுத்தவும் துணை செய்கிறது. ஆற்றலைப் பெருக்கவும் துணை செய்கிறது அப்படியான தொகுப்பாக நண்பர் சோலை மாயவனின் "விரல்களில் வழியும் குறளற்றவனின் குருதி" கவிதை நூல் திகழ்கிறது.
சிலருக்கு சமூகம் என்பது தான் முன்னேறுவதற்கான ஒரு பாதையாக நின்று விடுகிறது. சிலருக்கு சமூகம் என்பது தன்னை வழி நடத்தும் பள்ளியாகத் தெரிகிறது. சிலருக்கு சமூகம் என்பது மேடு பள்ளங்கள் நிறைந்த வர்க்க பேதங்கள் அடக்கியாளும் மனிதருக்குள் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும் கருணையற்ற அடக்கத்தனமாகத் தெரிகிறது. சிலருக்கு சமூகத்தின் போக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக கடந்து போக முடியக்கூடியதாக மாறிவிடுகிறது. ஆனால் ஒரு சிலருக்கே சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் மனிதனை எப்படியெல்லாம் பேதம் பிரிக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கையில் அதை சரி செய்ய வேண்டும் என்ற இலக்கு தென்படத் தொடங்குகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வர்க்க பேதங்கள் இனம் மொழி சாதி ரீதியான அடக்குமுறைகள் பெண்களின் மீதான துன்புறுத்தல்கள் இயற்கையை தனது பேராசைக்காக முற்றிலும் அழித்தொழித்து தனக்குத்தானே புதைகுழி தேடிக் கொள்ளும் மனிதனின் முரட்டுப் பிடிவாதம் போன்றவற்றில் நகர்ந்து கொண்டிருக்கும் சமூகத்தின் போக்கையும் எல்லோருக்கும் எடுத்துக்காட்டுவதன் வழியே மாற்றத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு கவிஞனும் தனது கவிதைகளை சொற்களைக் கொண்டு வாளெனச் சுழற்றுகிறான்.
**நீங்கள்
உறிஞ்சிப் பருகும்
தேநீரில்
இனிப்பைத் தவிர்த்திருந்தால் உணர்ந்திருக்கலாம்
எம்
மெல்லிய விரலில் வழியும் குரலற்றவனின் செங்குருதியில் ஒளிந்திருக்கும்
ஏழாம் சுவையை.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கடும் அவதியை அவர்கள் படும் துயரங்களை இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகள் தாண்டியும் மேடேற முடியாத அவர்களின் வாழ்க்கைப் பாட்டை இந்த கவிதை தோலுரித்துக் காட்டுகிறது
**கால்கள் இடறி
தலை குப்புற விழுந்து கிடந்தேன்
கூடவே
சிதறியது கழனி வேலைக்குப் போன
அம்மாவுக்குக் கொண்டு சென்ற கேழ்வரகுக் கூழ்.
மீதமான கூழில் ஆற்று நீரை நிரப்பி
அம்மாவின் பசி போக்கினேன் அம்மா இருக்கிறாள்
நான் இருக்கிறேன்
காணாமல் போயிருந்தது
பசி தீர்த்த
ஆறு.
பெருகிவரும் நகர்மயமாதலும் மக்கள் தொகைப் பெருக்கமும் மனிதர்களுக்குள் இட நெருக்கடியை ஏற்படுத்தி இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்யத் துவங்குகிறது. மனிதனின் பேராசையும் உலகத்தை தனது பிடிக்குள் வைத்து விட வேண்டும் என்ற வெறியும் மரங்களை அழித்து காடுகளை கட்டிடங்களாக மாற்றி பசுமையைப் பாலைவனமாக உருமாற்றி பிறக்கும் மனிதனுக்கு சுவாச உருளைகள் மாட்டிவிடும் சூழலை உண்டாக்கி விடுகிறது. என்றோ நம்மை வாழ்விகக உறுதுணையாக இருந்த கழனிகள் காணாமல் போய்விட்டன. நதிகள் வறண்டு கிடக்கின்றன அல்லது கட்டிடங்களாக எழுந்து நிற்கின்றன. இத்தகு சூழலில் நதிகளை நாம் வெறும் வார்த்தைகளாக தான் அசை போட முடிகிறது.
**நகரத்தின் முட்டுச் சந்துகளில் நெருக்கடிகளில் சிக்குண்டு பிதுங்கி கசங்கி
ஏமாந்து மிதிபட்டு
மரணிக்க முடியாமல் வாழ்பவனைப் பார்த்து
ஊர் போனால் சொல்லுகிறார்கள்
டவுன்ல சொகுசா வாழ்றவன் நம்மள பார்ப்பானா.
இக்கரைக்கு அக்கரை பச்சை. அவரவருக்கு அவரவர் வாழிடங்கள் சொர்க்கமாக தெரிந்தாலும் சரியாகத் தெரிந்தாலும் அடுத்தவர் பார்வையில் எவ்வளவு அழுக்கும் பொறாமையும் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது இந்தக் கவிதை
**ஏரி
குளம்
ஆறு
ஓடை
தாக்குப்பள்ளம்
அகன்ற வாய்க்கால்
நீர் கிடந்த என்
ஊரை வரைந்து கொண்டிருக்கிறேன் மூன்றாவது மாடியில் வசிக்கும் வீட்டின் சுவரில்
மகளுக்காக.
சட்டென்று
நுனி நாக்கினால் சுவைக்க முற்படுகிறாள்
உப்புக் கரிப்பதாய்
என் மீது உமிழ்ந்து விட்டு ஓடுகிறாள்
நீர்நிலைகளில் நிரப்பி வைத்திருந்தேன்
என் பால்ய வயதின் கண்ணீரை.
நதிகளின் மீதும் நீர் நிலைகளின் மீதும் கவிஞருக்கு இருக்கும் பேரன்பும் பெருங்கருணையும் அவரது இளமைப் பருவத்தை அவருக்கு அள்ளித்தந்த சொர்க்கமாக மாற்றி இருந்திருக்கலாம். அவரது வாழ்வாதாரத்தின் அடித்தளமாக நீர் நிலைகள் முதன்மைப்பணி ஆற்றியிருக்கலாம். அதுதான் தன் முன்னே நதியின் மரணத்தைக் கண்டு அவரது ஒவ்வொரு கவிதைகளும் கண்ணீர் வடிக்கின்றன.
**தேயிலை நிழலில்
உறங்குகிறது
வனமிழந்த சிறுத்தை.
விலங்குகளின் வாழ்விடத்தை மனிதன் பிடித்துக் கொண்டு அவை ஊருக்குள் உலா வருவதாக செய்திகளில் பேட்டி கொடுக்கிறது மனிதத் தனம்
**எம் நூற்றாண்டின்
தாகம் தீர்க்க மறுத்த
ஆதிக்க சாதியின்
சாபத்தின் அடையாளமாக
எம் குழந்தையின்
பீ துடைத்த துணியை
தூக்கி வீசும்
குப்பைத் தொட்டியாக இருக்கிறது
ஊரின் நடுவே
பொதுக்கிணறு.
இன்றும் நிறைய கிராமங்களில் கிணறுகளில் தண்ணீர் எடுக்க தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எத்தனையோ கிணறுகளில் இரட்டைக் கயிறு முறைகள் இன்னும் தொங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆதிக்கச் சாதியின் அழுத்தங்கள் இன்னும் எத்தனையோ மனங்களுக்குள் கண்ணீரை வடிக்கத்தான் செய்கின்றன. அத்தகையதொரு ஆதிக்கச் சாதியை எதிர்த்து நிற்கும் ஓர் ஒற்றைக் குரலாகவே இந்தக் கவிதையை பார்க்க முடிகிறது.
கவிதைகளின் வழியே காதலை கனவுகளை கற்பனைகளை விற்பனைசெய்யமுடியும் என்ற தளத்திலிருந்து சமூகத்தின் அவலத்தை மனங்களுக்குக் கடத்திவிட முடியும் என்பதை சோலை மாயவன் சிறப்பாக நடத்திக்காட்டியிருக்கிறார்.
இளையவன் சிவா