வழிந்தோடும் வியர்வைக் குவியல்
நீர்த்துப் போக
கதவினைத் திறந்து வைத்திருந்தேன்
காற்றின் லாகவத்தோடு
அறைக்குள் நுழைந்துவிட்டது
வெள்ளைநிறப் பூனைக்குட்டி
கலைந்துகிடக்கும் புத்தகங்களுக்கிடையே
நுழைந்த அதன் பார்வை
பூதாகரமான காட்டினைக் கண்ணுற்றிருக்கும்
உணவுகளின் வாசனையற்ற
அந்த அறையை நிச்சயம் சபித்திருக்கும்
புத்தக வரிகளுக்குள்ளிருந்து நிமிர்கிறேன்
அந்நியமற்ற உயிரொன்றின் பார்வை
என்னை விழுங்கிக்கொண்டிருந்தது
சன்னமாகக் குரலெழுப்பி விரட்டுகிறேன்
தளர்ந்த நடையில் வாசலைத் தாண்டி
மியாவ் என தீனமான குரலில் சுரத்தில்லாமல் கத்திவிட்டுச் செல்வது
பசியின் குரலாக இருக்கலாம் என்ற எண்ணம் திடுக்கென மேலெழுகிறது
சாலையோரக் கடையில் சாப்பிட்ட
நான்கு இட்லிகள்
இரவெல்லாம் மியாவ் மியாவ் எனக்
கத்திக்கொண்டிருந்தன…..
~ சோலைமாயவன்
No comments:
Post a Comment