மாட்டுக்கொட்டகையைக் கடந்து வீட்டுக்குள் போவோம்
வெள்ளிக்கிழமை மாட்டுச் சாணத்தால்
வீடு முழுவதும் மொழுகி இருக்க வேண்டும் அப்பாவுக்கு
நள்ளிரவில் மாடு பெய்யும் மூத்திரம்
இசைக்கு நிகரானது
வீட்டிற்கு வருவர்களுக்கு மோர் கொடுக்க சொல்லுவார்
மாடுகளுக்கு பெயர் சொல்லி தான் அழைப்பார்
தவிடு புண்ணாக்கு புல்கட்டுயென சுமந்துகொண்டு வருவார்
ஏர் பூட்டு அதிகாலையில் மாடுகளைஒரு குழந்தையை போல் எழுப்புவார்
கொம்புகளில் வர்ணங்கள் பூசி அழகு கூட்டுவார்
கலப்பைச் சுமந்து
காடு கழனியெல்லாம் ஏர் பூட்டி உழுது
மாடுகளால் எங்களை கரைசேர்த்தார்
நடை தளர்ந்து
பார்வை மங்கிய பொழுது
ஒவ்வொரு மாடுகளை விற்க கட்டாயப்படுத்தினோம்
மனம் பிசகிய நாளில்
மாட்டுக் கொட்டகையில் உறங்கிய அப்பா
இன்னும்
எழுந்திருக்கவே இல்லை
மாடுகளைப் பார்க்க பார்க்க
அப்பாவின் நினைவுகள்
ஒவ்வொரு புதையலென ஊற்றெடுக்கின்றன
No comments:
Post a Comment