Sunday, February 26, 2023

சோலைமாயவன் கவிதை

மாயா-76
ஆட்டுக்க்குட்டியின் கழுத்தில் கட்டிய சலங்கைமணியென
உன் பெயரை ஒலித்துக்கொண்டே இருக்கிறேன்

தனித்திருக்கும் வேப்பம்மரத்தின் கிளைகளில் உன் பெயரை
பறவையென பாடுகிறேன்
இனிக்கத்தொடங்கியன
வேப்பங்காய்கள்

முட்புதர்கள் நிறைந்து
மணல்கள் அற்று நீர் இல்லாத நெடிய ஆற்றில்
உன்பெயரை சும்மா கிறுக்கிறேன்
முதல் துளி உன்னை நனைக்கிறது

ஆளில்லாத பனந்தோப்புகளில் குயிலின் தனித்த குரலோடு உன் பெயரை
காற்றில் இசைக்கிறேன்
பனயோலையின் சலசலப்புக்குள் சங்கீதம்
பிறக்கிறது

பயன்படுத்த முடியாத
ஊரின் நடுவே
பாழும் கிணற்றில்
உன் பெயரை கல்லென
தூக்கிப் போட
தாகம் தீர்க்கிறது
ஊருக்கே கிணறு
மாயா

No comments:

Post a Comment