Monday, October 23, 2023

மக்கள் கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்களின் பார்வையில் சோலைமாயவனின் கவிதை

மக்கள் கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்களின் பார்வையில் சோலைமாயவனின் கவிதை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்ன கடவுள் நீ...
*********************
      -சோலை மாயவன்.
அவரது 'வெயில் மேயும் நீர்ப்புலி ' தொகுப்பின் கவிதை இது.

            ஒரு பண்டிகை. விநாயக சதுர்த்தி.
ஊரெல்லாம் ஒலிக்கிறது அவர் புகழ்பாடும் பாடல்கள். கவிஞருக்கோ கனகோபம். கொண்டாட மாட்டேன் போ என்று பிள்ளையாரோடு மல்லுக்கட்டுகிறார்.

கருப்புச் சுண்டல் தரமாட்டேன்
சுவையான கொழுக்கட்டை கிடையாது

     என்று கடவுளிடம் அறிவிக்கிறார் கவிஞர்.ஏன்?

   எனக்காக எதைத்
   தருவித்தாய்?

எனக் கேட்டுவிட்டு,

    தூர்வாரப்பட்ட ஏரிகளில்
    வெயில் குடையென வளர்ந்திருக்கிறது
    உனைக் கரைத்த ஆறுகளில்
    லாரிகள் ஓடுவது உனக்கு
    வலிக்கவில்லையா?

எனக் கேட்கிறார். நமக்கு வலிக்கிறது.

   உன்னைக்
   குழைத்துக் குழைத்து உருவாக்க
   களிமண் கொண்டுவந்த நிலமெங்கும்
   மீத்தேன் தூக்குக்கயிற்றில்
   தொங்கிக்கிடக்கிறது

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு எதுவும் செய்யாத கடவுளைப் பார்த்துத்தான் கேட்கிறார்

   என்ன கடவுள் நீ
   ஒன்றும் செய்யமுடியாத உனக்கா
   ஊரெங்கும் கொண்டாட்டங்கள்?

இந்த அபாரமான கவிதை, நாத்திகம் பேசவில்லை. அசலான ஆத்திகம் பேசுகிறது.

நிலம் பறிக்கப்படும் போது
நீர்நிலைகள் சூறையாடப்படும்போது
பேராசைப் பகாசுர நுகர்வுவெறி
இயற்கை வளங்களை வேட்டையாடும் போது, கண்டுகொள்ளாத கடவுள் /ஆன்மீகம் வெறும் சடங்கு என்பதைக் கோபத்தோடு முன்வைக்கிறது.

அப்பனின் பிணமெரிக்க
ஆற்றங்கரை போன மகன்
ஆற்றின் பிணம் கண்டான்
ஆற்றங்கரை மயானத்தில் என்பதாக

நதி என்றாலே சுடுகாடு நினைவுவரும் காலத்தில், ஆன்மீகம், கடவுள், அறநூல், நீதிநூல் இதற்கெல்லாம் என்ன பொருள்?

இதைத்தான் கேட்கிறது கவிதை.
இது காலத்தின் கேள்வி.
காலத்தின் கேள்வியைக் கேட்பதே
கவிதையின் வேள்வி ...
          ~~~கோ.கலியமூர்த்தி

1 comment: